
"அட எம்மைப் பார்த்து ரசிக்க இந்தளவு மனிதர்களா?" அசட்டை செய்யாமல் நீர்நிலையை நோக்கிச் செல்லும் யானையர் கூட்டம்
தனது பசியைத் தீர்ப்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்த ஆண் களிறு தன் முன்னங்காலை ஆட்டி ஆட்டிப் புல்லை உண்டபடி தனியே நின்றது. 'மோதிப் பார்க்கலாம் வா" என்று செல்லச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன இரண்டு இளம் பையன்கள். கோபத்தின் உச்சியில் நின்று சமராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர்களைத் தடுப்பதற்குத் துரத்திச் சென்றது ஒரு தந்தக்காரன். 'அம்மா என்னால் நடக்க முடியவில்லை!" என்று நிலத்தில் உட்கார்ந்து அழுது புரண்டது ஒரு செல்லக் குட்டி. சற்று அப்பால் தோற்றத்திலும் வயதிலும் முதிர்ந்த பிடி ஒன்று சிறு யானைக் கூட்டத்தை நிமிர்ந்த நடையுடன் நீர் அருந்துவதற்கு வழிநடத்திச் சென்று கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம்! கிட்டத்தட்ட நூறு நூற்றமைப்பது பேரைக் கொண்ட மன்னர் கால காலாட்படை, தம்மைப் பார்த்த பரவசத்தில் வியந்து நிற்கும் மனிதர்களைக் கணக்கெடுக்காமல் நீர்நிலையை நோக்கி நகர்ந்தபடி இருந்தன...
விபரம் பவானி பாலா படங்கள் இந்திக டி சில்வா
இந்த அத்தனை காட்சிகளும் எம் கண் முன் நிகழ்ந்தது தண்ணீர் வற்றியும் வற்றாமலும் இருந்த மின்னேரியாக் குளத்தின் கரையோரத்தில். அந்திவேளை வானம் கருமுகில்கள் நிறைந்து மப்பும் மந்தாரமுமாக இருக்க, வளிமண்டலத்தில் காணப்பட்ட ஈரப்பதனின் தாக்கத்தைத் தணிக்கும் விதமாக மிதமான வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருந்தது. பல விதமான வெண்ணிறப் பறவையினங்கள் ஆயிரக்கணக்கில் மின்னேரியாவின் சதுப்புநிலப் பிரதேசத்தில் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் நின்றன. யானைக் கூட்டத்தைப் பார்க்கச் செல்லும் வழியில் நாம் முதலில் கண்டவை இந்தக் கொக்குப் படையைத்தான். 'வயிறு நிறைய உண்ட மீன்களை அசைபோட்டுக் கொண்டிருக்கின்றனவாக்கும்" என்று கேலியாகச் சொன்னாள் என் தோழி. இலங்கையில் வாழும் பறவையினங்களில் 160 வரையான பறவையினங்கள் இந்தத் தேசிய வனத்தில் வாழ்கின்றன என்று கூறப்படுகின்றது.
கரிய நிறமும் பெரிய தோற்றமும், எதிர்வுகூற முடியாத குணாம்சமும் யானையை மனிதனிடமிருந்து தள்ளி வைத்தாலும், யானையைப் பார்த்து ரசிக்க விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் எம் எல்லோரையும் தனது தோற்றத்தால் வியக்;க வைக்கும் இந்த விலங்கை நூற்றுக் கணக்கில் நேரில் பார்க்கையில் கிட்டும் பரவசம் அலாதியானது. ஓவ்வொன்றும் புல் உண்ணும் விதமே விநோதமாக இருந்தது. சில தமது தும்பிக்கையால் புல்லைக் கொத்தாகப் பறித்து வாய்க்குள் செலுத்தின. எம்மில் சிலர் உணவு உண்பதற்கு முற்கரண்டியைப் பயன்படுத்துவதுபோல் காலால் புற்களை விறாண்டி தும்பிக்கையில் வைத்து பின் வாய்க்குள் கொண்டு சென்றன வேறு சில. 'இந்த யானையார் ஒரு மூடில் இருக்கிறார்" என்று மரத்தின் கீழ் நின்று கிளையை முறித்துக் கொண்டிருந்த ஒரு களிறைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தாள் வன இலாகா அதிகாரியை விடவும் யானைகளின் நடத்தைக் கோலங்களை அதிகம் அறிந்து வைத்திருந்த என் தோழி.
ஆம், உண்மைதான்! இனப்பெருக்க காலங்களில் பிடிகளைக் கவருவதற்காகக் களிறின் கண்-காதுப் பகுதியில் தோலுக்கடியில் இருந்து திரவம் ஒன்று சுரப்பெடுக்கும் என்று அந்த அதிகாரியும் சொல்லி வைத்தார். அந்த வேளையில் பிடிகள் மட்டுமே தம்மை நெருங்க களிறுகள் அனுமதிக்கின்றன. தம்முடைய 'வசந்த காலத்தை" அநுபவிக்கும் இரு பால் யானைகளும் இந்த ஒன்று கூடல் சமயங்களில் கலவி கொள்வதையும் இங்கு தாராளமாகக் காணலாம். ஆனால் மனிதர்கள் மத்தியில் நடைபெறுவதைப் போலன்றி இவை ஆயுளுக்கும் கணவன்-மனைவி உறவைப் பேணுகின்றன என்பது மேலதிக விசேட தகவல். கலவி மட்டுமல்ல குட்டி குட்டி மோதல்களும் ஆங்காங்கே நடந்தன. நண்பர்கள் மீது சினம் கொண்ட யானைகள் பிளிறவும் தவறவில்லை.
மனிதர்கள் மத்தியில் நடைபெறுவதைப் போலன்றி யானைகள் ஆயுளுக்கும் கணவன்-மனைவி உறவைக் கைவிடமாட்டா என்பது ஓரு சுவாரஸ்யமான தகவல்
எல்லா யானைகளுமே தமது செவி மடல்களை ஓய்வில்லாமல் விசிறிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மனிதனுடைய குருதி இரட்டைச் சுற்றோட்டம் உடையதால் உடல் வெப்ப நிலையைச் சீராக்க உதவுவதைப் போல் யானைகளுக்கு இறைவன் இயற்கையாக அளித்த கொடைதான் அவற்றின் காதுகள். காது மடல்களை அசைப்பதன் மூலம் யானைகள் உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. சில யானைகள் மண்குளியல் செய்து எம்மீது
தூசி பரப்பியதையும் கூறவேண்டும். இந்தக் கரிய பர்வதங்களின் மத்தியில் நாங்களும் உங்களுடன் விளையாட வரவா என்று கொக்குப் பறவைகள் பயமின்றி போட்டி போட்டதையும் காண முடிந்தது. இதற்குக் காரணம் உண்டு. யானை ஒரு தாவர உண்ணி, தவிரவும் மனிதனைத் தவிர வேறெந்த விலங்குகளுக்கும் தீமை பயக்காத ஒரு தனித்துவமான பாலுண்ணி. கேட்கும் புலனும் மோப்பத் திறனும் அதிகம் வாய்ந்தவை.
பொதுவாகப் பெண் யானைகள் தமது, தாய், சகோதரிகளுடன் கூட்டமாகத் திரியும். தனது கருவைச் சுமக்கும் 22 மாத காலத்தைத் தவிர பிற நாட்களில் தனது சமூகக் குழுவை விட்டுப் பெண் யானைகள் விலக மாட்டா. ஆண் களிறு 10 வயதடைந்து பருவத்துக்கு வந்ததும் 'நான் போய் வாறேன்" என்று தனது குழுவை விட்டுப் பிரிந்து சென்று விடும். ஆடி அசைந்தபடி சென்ற யானைக் கூட்டங்களைத் தொடர்ந்து நாமும் சென்றோம். நீரைக் கண்டுவிட்ட குதூகலத்தில் அதில் மூழ்குவதையும், தண்ணீரைத் தம்மீது விசிறி அடிப்தையும் தூரத்தில் பார்த்து கிலாகித்தபடி இருந்த எம்மிடம் சற்று உட்புறமாகச் சென்றால் தொலைநோக்குக் கோபுரத்தில் ஏறி நாலாபுறமும் மின்னேரியாக் குளத்தின் முழு அழகையும் பார்த்து ரசிக்க முடியும் என்று தகவல் சொன்னார் எம்முடன் வழிகாட்டியாக வந்த அந்த வன இலாகா அதிகாரி. ஆகவே காட்டின் உட்புறம் நோக்கி எமது பயணம் தொடர்ந்தது.
தரையில் கூட்டமாக நின்ற நான்கு கால் கரிய மலைகளுக்கு ஈடாக வானத்திலும் மழை முகில்கள் கருக்கட்டத் தொடங்கின. மழையில் நாம் நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வளவு நேரமும் பொறுமை காத்த வருண பகவான் நாம் தொலைநோக்குக் கோபுரத்தை அடைந்த மறு நொடியில் சோவெனப் பொழியத் தொடங்கினார். கிடுகிடுவென படிக்கட்டுகள் வழியே மேற் தட்டுக்கு சென்ற எமக்கு 28,000 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மின்னேரியா வனப் பகுதியையும் அதன் நீரேந்துப் பிரசேதங்களையும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்து மகிழ்ந்தோம். மழையில் நனைந்தபடி ஒரு யானைக் கூட்டம் மெதுவாக அசைந்து அசைந்து சென்று கொண்டிருந்ததை உயரத்திலிருந்து பார்க்கக் கிடைத்தமை உண்மையில் அதிஷ்டம் என்றே கூறவேண்டும்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையில் தற்போது 5,500க்கு மேற்பட்ட யானைகள் இருப்பதாகக் கருதப்படுகின்றது.
யானைக் கூட்டங்களின் இந்த ஒன்று கூடலை மின்னேரியா வனப்பிரதேசத்தில் பெரும்பாலும் யூலை முதல் செப்டெம்பர் வரையான வறட்சிக் காலப்பகுதியில் பார்த்து ரசிக்க முடியும். நூளொன்றுக்கு 250கி.கி உணவை வளர்ந்த யானை ஒன்று உண்ணும். 100லீ. நீர் அதன் தாகத்தைத் தீர்ப்பதற்குத் தேவை. ஆகவேதான்; நீர், உணவு, நிழல், கலவி போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வறட்சியான காலத்தில் யானைகள் இங்கு ஒன்று கூடுகின்றன. 1997இல் உருவாக்கப்பட்ட இத்தேசிய வனம் உல்லாசப் பயணிகளை அதிகளவில் கவர்ந்த, ஆசியாவிலேயே சிறந்த இயற்கை வனப்பூங்காவாக விளங்குகின்றது. அதிலும் ஆசிய யானைகள் அதிகளவில் ஒன்றுகூடி உல்லாசமாகத் திரியும் அரிய காட்சியை மின்னேரியாவனப் பகுதியில் மட்டுமே உங்களால் பார்த்து மகிழமுடியும்!
This article features the 'Elephant Gathering' at Minneriya.
மின்னேரியாக் குளம் கி.மு 3ஆம் நூற்றாண்டில் மகாசேனன் மன்னனினால் கட்டப்பட்டது. கடல் போன்ற பாரிய பரப்பைக் கொண்ட இந்தக்குளம் மின்னேரியா சமுத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது. பொலநறுவை மாவட்டம் பொன் விளையும் பூமியாக விளங்கியமைக்கு இக்குளத்தின் ஊடாக வழங்கப்பட்ட நீர்ப்பாசனமும் பெரிதும் உதவியது. வட மத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் பொலநறுவைக்கும் ஹபரணவுக்கும் இடையில் மின்னேரியக்குளத்தை உள்ளடக்கிய மின்னேரியாத் தேசிய வனம் காணப்படுகின்றது.